Jul 4, 2011

தனி தெலுங்கானா அமைவதை யாராலும் தடுக்க முடியாது!!

JULY 05, ஐதராபாத்:  தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கக் கோரி, 11 ஆந்திர அமைச்சர்கள் உட்பட ஆளும் கட்சியைச் சேர்ந்த 39 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் 34 தெலுங்கு தேச எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 73 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதனால், ஆந்திர அரசியலில் புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 11 எம்.பி.,க்களும் ராஜினாமா செய்துள்ளனர். ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும், என்ற நீண்ட நாள் கோரிக்கை தற்போது தீவிரமடைந்துள்ளது. வாரங்கல், அடிலாபாத், கம்மம், மகபூப் நகர், நலகொண்டா, ரங்காரெட்டி மாவட்டம், கரீம் நகர், நிஜாமாபாத், மேடக், ஐதராபாத் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது தெலுங்கானா.

இதையடுத்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதற்குரிய சாதக பாதகங்களை ஆராயும்படி, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைக்கப்பட்டது. தனி தெலுங்கானா மாநிலத்தால் சாதகங்களை விட பாதகங்களே அதிகம் என ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை கொடுத்தது. இதனால் தனி தெலுங்கான அமைக்கப்படவில்லை.

48 மணி நேர பந்த் அறிவிப்பு : தனி தெலுங்கானா போராட்டம் இன்று முதல் தீவிரமடையும் என, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் இது குறித்து சந்திரசேகர ராவ் கூறியதாவது: தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் விஷயத்தில் மத்திய அரசு இன்னும் மெத்தனப் போக்கை கடைபிடித்தால், இந்த விஷயம் இனி பற்றி எரியும்.

48 மணிநேர பந்த்தையொட்டி நாளை (இன்று) முதல் பஸ்கள், ரயில்கள் ஓடாது. தெலுங்கானா மக்களின் பொறுமையை இனியும் சோதிக்கக் கூடாது. தனி தெலுங்கானாவை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும்படி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.தனி தெலுங்கானாவை உருவாக்கும் நம்பிக்கை முயற்சியை இனியும் தடுக்க முடியாது. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அரசியல் பாகுபாடில்லாமல் ஒன்றிணைந்து விட்டனர் இவ்வாறு அவர் கூறினார்.

No comments: