Jul 12, 2011

புதிய மருத்துவ காப்பீடு திட்டம் விரைவில் தொடங்கப்படும் ஜெ!!

ஜூலை 12 , சென்னை: புதிய மருத்துவ காப்பீடு திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதில், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை சிகிச்சை பெற அனுமதி வழங்கப்படும்.

 குறிப்பிட்ட அறுவை சிகிச்சைக்கு ஸீ1.5 லட்சம் வரை அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் சுகாதாரத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யத்தக்க வகையில் இல்லை. எனவே, அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தும் என்று கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் முழுமையான புதிய காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். தற்போதைய காப்பீட்டுத் திட்டம் 2011, ஜுலை 5ம் தேதியுடன் முடிவடைந்தது. எனது அரசால் புதிதாக தொடங்கப்பட இருக்கும் காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் வரவேற்கப்படும். இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக அமையும் :

1. முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு 4 ஆண்டுக்கு ஒரு லட்சம் என்ற அதிகபட்ச மருத்துவச் செலவு, இந்த புதியத் திட்டத்தில் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் குறிப்பிட்ட சில நோய்களுக்கு ரூ.1.50 லட்சம் வரையிலும் அனுமதிக்கப்படும். அதாவது, 4 ஆண்டுகளில் ஒரு குடும்பம் அதிகபட்சமாக ரூ.4 லட்சம் மருத்துவச் செலவினை பெற இயலும்.

2. முந்தைய திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 642 சிகிச்சை முறைகள் மாற்றி அமைக்கப்பட்டு, தற்போது மருத்துவ மேலாண்மை மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளையும் சேர்த்து மொத்தம் 950 வகையான சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்படும்.

3. சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும் காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும். மேலும் அரசு மருத்துவ மனைகளின் மூலமாகவோ, மருத்துவ முகாம்களின் மூலமாகவோ பரிந்துரைக்கப்படும் நோயாளி களுக்கு பரிசோதனைக்காக செலவிடப்பட்ட தொகை, அறுவை சிகிச்சை தேவைப்படாத பட்சத்திலும் காப்பீட்டுத் தொகையில் அடங்கும் வகையில் வழிவகை செய்யப்படும். இவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாத இனங்களில், ஏற்கெனவே இருந்த காப்பீட்டு திட்டத்தில், பரிசோதனைச் செலவு வழங்குவதற்கு வழிவகை செய்யப்படவில்லை.

4. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நாளில் இருந்து 5 நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். இந்த வகையிலான கட்டணங்களை பெறுவதற்கு முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை.

5. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தொடர் சிகிச்சை தேவைப்படும் சில வகை நோய்களுக்கு, வரையறுக்கப்பட்ட தொகை தனியாக நிர்ணயித்து வழங்கப்படும். இதுவும் முந்தைய திட்டத்தில் வழிவகை செய்யப்படாத ஒன்றாகும்.

6. அரசு மருத்துவமனைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், தற்போதுள்ள முறைகளை மாற்றி, சிகிச்சைக்காக வரையறுக்கப்பட்ட தொகையை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவதுபோல் அரசு மருத்துவமனைகளுக்கும் முழுமையாக வழங்கப்படும். மேலும், சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

7. அங்கீகரிக்கப்படும் அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்திற்கென அனைத்து வசதிகளுடன் கூடிய தனி, சிறப்புப் பகுதிகள் அமைக்கப்படும். இதனால் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற பொது மக்கள் அரசு மருத்துவமனைகளை அதிக அளவில் வருவதற்குரிய சூழ்நிலை உருவாகும். இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்து வதற்கான காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

புதிய திட்டம் தொடங்குவதற்கு முன் இடைப்பட்ட காலத்தில், உடனடியாக உயிர் காப்பதற்கான சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு, தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவச் செலவில் சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்படும். இதற்கான மருத்துவக் கட்டணத்தை அரசே நேரடியாக வழங்கும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments: